தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரத்தரமாக மூடவலியுறுத்தி பொதுமக்கள் தாமாகவே ஒற்றிணைந்து தொடர் போராட்டங்களை எழுச்சியோடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தொடர்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு அருகில் ''ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்'' சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்ள தி.மு.க. இளைஞரணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மாநில இளைஞரணி துணைச்செயலாளரான ஜோயல்.
அவர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து., " தமிழக அரசு ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரத்தரமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும், புற்றுநோய் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், உயிர்கொல்லி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு உறுதுணையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை வெற்றி பெறசெய்திடவேண்டியது நமது மண்ணின் மக்களின் தலையாய கடமையாகும். மராட்டிய மண்ணில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது போன்று, நமது மாவட்ட மண்ணில் இருந்தும் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை விரட்டி அடித்திடுவதற்காக நடைபெறும் இந்த எழுச்சிமிகு உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞர் அணியினர், இளைஞர்கள், இளம்பெண்கள், தாய்மார்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஜாதி, மத, இன பாகுபாடுஇன்றி தவறாமல் குடும்பத்தோடு வந்து பங்கேற்று நமது மண்ணின் எதிர்ப்பினை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்திடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நமது மாவட்ட மக்களின் எழுச்சிமிகு தொடர் போராட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் தமிழர்களும் ஆதரவுக்கரம் நீட்டி, ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருவதன் மூலமாக வரும் நாட்களில் ஸ்டெர்லைட் நச்சாலைக்கு நிரத்தரமாக மூடுவிழா நடத்தி விடுவது என்பது உறுதியாகியுள்ளது. திமுக இளைஞர் அணியானது மாண்புமிகு தளபதியாரின் ஆனைப்படி, ''தூத்துக்குடியை தூய்மையாக மாற்றுவதற்கும், ஸ்டெர்லைட் நச்சு தொழிற்சாலையை இம்மண்ணில் இருந்து மக்களோடு மக்களாக ஒற்றிணைந்து விரட்டி அடிப்பதற்கும் எந்த சர்வபலி தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்'' என்பதை இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்." என்றிருக்கின்றது அந்த அறிக்கை. இதனால் தி.மு.க. இளை ஞரணியும் பெருமளவில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.