தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. வேறு யாருக்கும் உருமாறிய கரோனா உறுதி செய்யப்படவில்லை. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய நபர் ஒருவருக்கு சாதாரண கரோனாதான்; உருமாறிய கரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 400-க்கும் மேற்பட்டோரைக் கண்டறியும் பணி தொடர்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் அங்கேயே திரும்பிச் சென்றுவிட்டனர். இந்த 400 பேரில், பலர் முகவரியை மாற்றிக் கொடுத்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. உருமாறிய கரோனா குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டாம். சிகிச்சை முறையில் எந்த மாற்றமும் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 25- ஆம் தேதிக்குப் பின் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். இதுவரை தமிழகத்தில் இருந்து 42 மாதிரிகள் உருமாறிய கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனுப்பப்பட்ட 42 மாதிரிகளில் 2 முடிவுகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.