Skip to main content

கண் துடைப்புக்காக நடத்தப்படும் ஆய்வுகள் – சட்டமன்ற உறுதிக்குழுவின் ஆய்வோ ஆய்வு

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

t


தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும் புதிய திட்டப்பணிகள் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதையும், திட்டப்பணிகள் தற்போதைய முன்னேற்றப் பணிகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அளித்திட தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஏற்படுத்தப்பட்டு செயலாற்றி வருகிறது. அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தமிழக சட்டமன்ற உறுதிமொழிக் குழவினர் அதன் தலைவர் இன்பதுரை தலைமையில், உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், வாசுதேவநல்லூர் மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அணைக்கட்டு நந்தகுமார், தலைமை செயலக செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் சுப்பிரமணியம், சார்புச் செயலாளர் சுஜாதாதேவி ஆகியோர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.


வேலூர் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் அம்ரூத் குடிநீர்த் திட்டத்தின் கீழ் காட்பாடி ஈ.பி.காலனியில் செயல்படுத்தப்பட்டு வரும் சுமார் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளை தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழிக் குழவினர் பார்வையிட்டனர், இத்திட்டத்திற்கு ரூ.234.93 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய ஒன்றிய அரசாங்கம் 50 சதவிகித பங்கும், தமிழக அரசு 20 சதவிகித பங்கும், மாநகராட்சி அமைப்பினர் 30 சதவிகித பங்கும் அளித்து செயல்படுத்தி வருகின்றது. இதனால் 6 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றனர் அதிகாரிகள்.

 

t


அடுத்ததாக காட்பாடி காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தை நேரடியாக பார்வையிட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து உறுதிமொழிக் குழவினர் கேட்டறிந்தார்கள். 40 முதல் 60 நாட்களில் திடக்கழிவுகள் மக்கி நுண் உயிர் உரம் தயாரானவுடன் பதப்படுத்தப்பட்டு தேவைக்கேற்ப பைகளில் இடப்பட்டு கிலோ 2 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. மக்காத மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் தனியாக பிரித்து 24 வகையாக பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாக பயன்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறது. இம்மையம் மகிளர் சுய உதவிக்குழு மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் 11 பெண்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.250- மாநகராட்சியால் வழங்கப்படுவதுடன் மையத்தில் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை முழவதும் இவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


     இதனை தொடர்ந்து மேல்மொணவூர் வேலூர் அரசு தொழிற்பயிற்ச்சி நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் வாரிய நல அலுவலகம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடியும் நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். நாள்தோறும் 50 வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர். இங்கு ஆய்வு செய்த குழுவிடம், பொதுமக்கள் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பொதுமக்கள் உணவு கூடம் ஆகியவைகள் இல்லை, நாய்கடி, பாம்புக்கடிகளுக்கு பொதுமக்களுக்கு முறையாக ஊசி போடுவதில்லை என குற்றம்சாட்டினர். குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டுமென உத்தரவிட்டனர்.


தொடர்ந்து அரியூரில் கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் வாயிலாக முடிவுற்ற பணிகளை பார்வையிட்டனர். மேலும் இரயில்வே துறையினரால் நிலுவையில் உள்ள பணியினை அனுமதி பெற்று செயல்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் குழுவினர் கேட்டறிந்தனர்.


ஆம்பூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் அம்ருத் குடிநீர் திட்டத்தின் மூலம் ரூ.50.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திட்டபணிகளில் ரபிக் நகர் பகுதியில் 5 இலட்சம் கொள்ளளவு  கொண்ட ரூ.2.07 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டு திட்டம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


இதனை தொடர்ந்து ஆம்பூர் வட்டம் நரிக்குறவர்கள் தாங்கள் வசிக்க ஒரு நிலையான வீடு இல்லை என்று பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இவற்றின் மீது தீர்வு காணும் வகையில் இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்னர் சோலூர் ஊராட்சி நமாஸ்மேடு அரசு பொறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கினர். இந்தாண்டு அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் இலவசமாக பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ2.1 இலட்சமும் வேலூர் மாவட்ட ரோட்டரி சங்கம் மூலம் ரூ.1.9 இலட்சம் என 4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுயிருந்தது. மணல் தட்டுப்பாடு என்றதும் இதனை உடனடியாக முடியுங்கள் என உத்தரவிட்டனர்.

பின்னர் தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழி குழுத் தலைவர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது, வேலூர் மாவட்டத்தில் 72 துறைகளின் சார்பாக 265 உறுதிமொழிகள் சட்டமன்றத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இதன் நடைமுறையை நேரடியாக ஆய்வு செய்து ஆய்வறிக்கையை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.


ஆய்வு நடத்திய சட்டமன்ற உறுதிமொழிக்குழு நவம்பர் 30ந்தேதி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அனைத்து துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் நடத்திவிட்டு சென்றது.


இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே, சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தந்த வாக்குறுதிப்படி அந்த திட்டங்களை மாவட்டத்தில் அதிகாரிகள் சரியாக செய்துள்ளார்களா, ஏன் தாமதமாக பணிகள் நடக்கிறது என்பதை கேள்விகள் மூலம் கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடுவதும், அதுப்பற்றிய அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பதுமே இக்குழுவின் பணி. அதை செய்துள்ளார்களா ? எனக்கேட்டால் இல்லை என்கிறார்கள் குழுவினருடன் சென்றவர்கள்.

சார்ந்த செய்திகள்