சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவியும், திலீப்குமாரும் காதலித்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்திலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விமலாதேவியை வத்தலகுண்டு பகுதியிலிருந்து மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். உசிலம்பட்டி பகுதி அரசியல்வாதிகளின் தலையீட்டில் விமலாதேவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் சில நாளில் எரிந்த நிலையில் விமலாதேவியின் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், தனக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரியும் திலீப்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும், திலீப்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
மேலும்,
-உரிய முறையில் விசாரிக்காத காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
- ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் புகார்களை கவனிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்
- அவர்களின் புகார்களை பெற 24 மணி நேர தொலைப்பேசி வசதியை ஏற்படுத்த வேண்டும்
- புகார்களை இணைக்கும் வகையில் காவல்துறையின் சி.சி.ட்டி.என்.எஸ். (CCTNS) வசதியுடன் இணைக்கப்பட வேண்டும்
- காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களை மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிக்க வேண்டும்
- தம்பதிகளை பாதுகாப்பது, பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பது என நின்று விடாமல், கலந்தாய்வும் வழங்க வேண்டும்
- ஆணவக்கொலைகளை களைந்தெடுக்கும் வண்ணம் போதிய நிதி ஒதுக்கி, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு போதிய இருப்பிட வசதி ஏற்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும்
- இதுபோன்ற செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட குழுக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்
- தனிப்பிரிவு ஏற்படுத்தும் பணியை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்கு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள் முன்னணியின் மாநில செயலாளர் 2017ஆம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்துவரும் நிலையில் உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதில் மனுவில் (1) அப்போதைய செக்காணூரனி காவல் ஆய்வாளர் சுகுமார், உசிலம்பட்டி உதவி ஆய்வாளர் ராணி, வத்தலகுண்டு ஆய்வாளர் வினோஜ், துணை ஆய்வாளர் ஆனந்தி ஆகியோரின் ஊதிய உயர்வை மூன்றாண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(2) மேலும் புகார்களை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் காவல்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கபட்டுள்ளது .
(3) அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் 24 மணி நேர அடிப்படையில் 1091, 1077 உள்ளிட்ட உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
(4) இணையதளம் மற்றும் செயலி மூலம் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்வது குறித்து காவல்துறை முடிவெடுப்பார்கள்.
(5) மாவட்ட வாரியான பிரிவுகள் கண்காணிப்பது
(6) தம்பதி, பெற்றோருக்கு கலந்தாய்வு வழங்குவது
(7) தம்பதிகளுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு 10.02.2017ல் டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
(8) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
(9) தம்பதிகளை பாதுகாக்க தவறிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றியுள்ளதால் தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிபு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.