
தமிழக அளவில் சேலம் மாநகர காவல்துறை, ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளின் கொட்டத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வரும் காவல்துறையினரை ஒட்டுமொத்தமாக ஆட்டி வைத்து வருகிறது, கரோனா வைரஸ் தொற்று.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாள்தோறும் சராசரியாக 280- க்கும் மேற்பட்டோர் கரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 360- க்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் இறந்துள்ளனர்.
குற்ற வழக்குகளில் நெருங்கி விசாரிக்கும்போது காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு இலக்காகின்றனர்.
சேலம் மாநகர காவல்துறையில் இதுவரை 155 போலீசார் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில்தான், அண்மையில் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரும் கரோனா காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சைக்கு பிறகு ஆணையர் குணமடைந்த நிலையில், தற்போது துணை ஆணையர் செந்திலுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், துணை ஆணையரின் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த அலுவலக ஊழியர்கள், காவல்துறையினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். சில உதவி ஆணையர்கள், ஆய்வாளர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.