
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் ஜான் என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(20/03/2025) கேள்வி எழுப்பினார். 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என முதல்வர் கூறிய நேற்றைய தினமே நான்கு கொலைகள் நிகழ்ந்துள்ளது' என தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விளக்கமளித்து பேசினார். அவரது உரையில், 'சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜான் என்கிற சாணக்கியன் பிணை அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று கையொப்பமிட்டு விட்டு தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார்கள்.
காயமடைந்த சாணக்கியன் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அவருடைய மனைவி சித்தோடு தனியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இதில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகிய நான்கு பேரை பச்சன்பாளையம் என்ற இடத்தில் காரை வழிமறித்து கைது செய்ய முயன்றுள்ளனர். அப்பொழுது காவல்துறையினரை கொடிய ஆயுதங்களால் தாக்கினர். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்பிற்காக சுட்டு சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோரை காயத்துடன் பிடித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் சாணக்கியன் இரண்டாவது எதிரி என்பதும் அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்து சில கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எந்த விதமான பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை'' என்றார்.
அப்போது முதல்வர் விளக்கமளித்து பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்பொழுது ''தூத்துக்குடியில் நடந்த சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் இதையெல்லாம் நீங்கள் மறந்திடக் கூடாது. உங்களைப்போல் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. தைரியம் இருந்தால் நான் பேசுவதை, என் பதிலை கேட்டுவிட்டு வெளியே செல்லுங்கள். கேட்காமலே ஓடுகிறீர்களே. தைரியம் இல்லாமல் வெளியேறாதீர்கள்'' என்றார்.