கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் டி.பவழங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக சுடுகாடு வசதி இல்லை. இதனால் இங்கு யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை அங்குள்ள வெள்ளாற்றின் மறு கரைக்கு எடுத்து சென்று அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கீரமங்கலம் ஆதிதிராவிட பகுதியில் வசித்த ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய ஆற்றின் மறுகரைக்கு ஆபத்தான முறையில் மார்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பல ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு சுடுகாடு வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆற்றுக்கு இந்த புறத்தில் உள்ள சுடுகாடுகளிலும், இதுபோன்ற மழைக் காலங்களில் கூட பிணத்தைப் புதைக்கவோ, எரிக்கவோ முடியாது.
இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரும்போது எல்லாம் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய பாடைகட்டி ஆற்றின் வழியே நீந்திச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் போது எங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த அவல நிலையை போக்க சுடுகாடு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.