
திருச்சி எஸ்.பியாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட வருண் குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மேலும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாதகவின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் கடந்த ஆண்டு திருச்சி போலீசாரால் தான் கைது செய்யப்பட்டபோது, என்னிடம் இருந்து இரண்டு செல்போன்களை விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நான் நீதிமன்றத்தின் மூலம் ஜாமினில் வெளியே வந்த பிறகும் என்னுடைய செல்போன்களை காவல்துறையினர் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாகவும் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமயத்தில் என்னுடைய செல்போனில் இருந்த ஆடியோக்களை தன்னுடைய நண்பரான திருச்சி சூர்யாவிடம் கொடுத்து அதில் உள்ள ஆடியோக்களை திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டார். அதேபோல் வருண்குமார் அனைத்திந்திய காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் நாதக என்ற கட்சி தடைசெய்யப்பட வேண்டிய கட்சி என்று குறிப்பிட்டு பேசினார். தற்போது திமுகவுடன் கைகோர்த்து வருண்குமார் நாதகவை அழிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார். இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு எதிரானது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டிஐஜி வருண்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.