காரைக்காலில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான குற்றப் பத்திரிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காரைக்கால் போலீசார் தாக்கல் செய்தனர்.
காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் என்ற மாணவன் குளிர்பானத்தை குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செய்யப்பட்ட விசாரணையில் சக மாணவருடன் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சக மாணவனின் தாயார் பாலமணிகண்டனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சக மாணவனின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாகப் பல நாட்களாக சிறுவன் சிகிச்சையில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட சகாயராணி விக்டோரியா மூன்று மாதங்களாக புதுச்சேரி சிறையிலிருந்த நிலையில், காரைக்கால் நகர காவல் போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தனர். தக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் விசாரணையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள், சிறுவனுக்கு குளிர்பானத்தில் மருந்து கலந்து கொடுத்ததற்கான ஆதாரங்கள், மருந்து கடையில் எலி மருந்து வாங்கியதற்கான சிசிடிவி காட்சி உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுவனுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை வீடியோவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.