
விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரில், தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது, விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்தது. மேலும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டெல்லியை நோக்கி பேரணியாக செல்வதற்கு விவசாயிகள் முன்னெடுத்த ஒவ்வொரு போராட்டங்களையும் டெல்லி போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும் நடத்தி தடுத்தி நிறுத்தி வருகின்றனர். இதனால், போராட்டங்கள் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டே இருந்தது. இருந்த போதிலும், கடந்த ஓராண்டாக ஹரியானா மற்றும் பஞ்சாப் ஒட்டிய ஷம்பு எல்லைப் பகுதியில் கூடாரம் அமைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களை நேற்று மாலை புல்டோசர் மூலம் பஞ்சாப் போலீசார் அகற்றி இடித்து தள்ளியுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வண் சிங் பாந்தர் உள்ளிட்ட விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி கைது செய்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால் இந்த பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த காரணத்தினால், விவசாயிகளின் கூடாரத்தை இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.