
வடகிழக்கு டெல்லியில் சுந்தர் நாக்ரி பகுதியைச் சேர்ந்தவர் கோமல் என்ற இளம்பெண். இவர், கடந்த 12ஆம் தேதி காணாமல் போனதாக சீமாபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 17ஆம் தேதி ஒரு பெண்ணின் உடல் கால்வாயில் மிதந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் பரந்தது. அந்த தகவலின் பேரில், அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், காணாமல் போனதாகக் கூறப்பட்ட கோமலின் உடல் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி கோமலின் நண்பரான ஆசிஃப் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார் டிரைவரான ஆசிஃப் கடந்த 12ஆம் தேதி தனது தோழி கோமலை காரில் ஏற்றிச் சென்றுள்ளார். அந்த பயணத்தின் போது, ஆசிஃப்க்கும், கோமலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆசிஃப், கோமலின் கழுத்தை நெரித்து கொன்று தண்ணீரில் மிதக்காதபடி, ஒரு பாறையில் கட்டி சாவ்லா கால்வாயில் வீசியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ஆசிஃப் கைது செய்த போலீசார், அவருடைய காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொலையில் வேறு யாரேனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.