Skip to main content

ஈரோட்டுக்கு புதிதாக 82 திட்டங்கள்..! - அமைச்சர் சு.முத்துச்சாமி தகவல்

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

82 new projects for Erode ..! -  Minister S. Muthuchamy


 
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மாருதி நகரில் பல்வேறு திட்டங்களுக்காக தோண்டப்பட்டு பழுதாகி கிடந்த சாலைக்கு பதிலாக புதிய தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடக்கம் இன்று 29ந் தேதி காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து திண்டல் லட்சுமி நகரில் புதியதாக அமைய உள்ள தார் சாலை பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சோலார் பகுதியில் பிரம்மாண்ட முறையில் அமைய உள்ள ஈரோடு புதிய பஸ் நிலையம் பணிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்கனவே பஸ் நிலையம் இருந்தாலும் கூட  இன்றைய சூழ்நிலையில் அது பற்றாக்குறை என்பதைவிட போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதனால் புற நகரான சோலார் என்ற பகுதியில் ஏறத்தாழ 54 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கிறது. அதில் 15 முதல் 20 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அரசு சார்பில் முயற்சி செய்து வருகிறோம். அவ்வாறு சோலாரில் பஸ் நிலையம் வரும் போது ஏற்கனவே நகரத்தில் இருக்கிற பழைய பஸ் நிலையம் நகர பஸ் நிலையமாக செயல்படும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதி பஸ் நிலையமாகவும், மற்றொரு பகுதி மார்க்கெட்டாகவும் அமைய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். 

 

82 new projects for Erode ..! -  Minister S. Muthuchamy

 

ஈரோட்டில் உள்ள மஞ்சள் வளாகத்தை இன்னும் பெரிய அளவில் 15 ஏக்கரில் விரிவுபடுத்தி தரப்படும். விளையாட்டு துறை முன்னேற்றத்திற்காக ரூபாய் 35 கோடி மதிப்பில் ஒரு திட்டம் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஈரோட்டுக்கு சட்டக் கல்லூரி  கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி ஈரோட்டின் வளர்ச்சிக்காக  ஏறத்தாழ 82 திட்டங்களை வகுத்துள்ளோம். இந்த திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். காவல்துறைக்கு பல புதிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம். டெக்ஸ்டைல்ஸ் யூனிவர்சிட்டி ஒன்றை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதற்குண்டான இடம் குறித்து தேர்வு செய்து வருகிறோம். ஈரோட்டிலிருந்து செல்லக் கூடிய அனைத்து வழி சாலைகளையும் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறோம்.

 

குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குடிசைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும். அம்பேத்கர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு, தியாகி திருப்பூர் குமரன் பெயரில் ஒரு சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் மிகப்பெரிய அளவில்  நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பொது சுத்திகரிப்பு நிலையம் அதை ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கபடும். துணை நகரம், ஆட்டோ நகரம் இப்படி பல திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முதல்வர் இந்தத் திட்டங்களை காலதாமதமின்றி விரைந்து செயல்படுத்த எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்னும் விரிவாக்கம் செய்ய உள்ளோம். இன்று நான்கு பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக தனியாக வாட்ஸ் அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வாட்ஸ் அப் செயலில் இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .மீது 24 புகார்களுக்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்