![coronavirus prevention theni district lockdown and relaxation](http://image.nakkheeran.in/cdn/farfuture/f3rQPK-Dd0SQbshjhNgmJdZzUYRrMpgnR1_KEPZLTso/1593687981/sites/default/files/inline-images/sssss_2.jpg)
தேனி மாவட்டத்தில் ஜூலை 1- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஜூலை 1- ஆம் தேதி முதல் வருகிற 15- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நகராட்சிகள் மட்டுமின்றி பேரூராட்சிகளிலும் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 02.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் இந்த கட்டுப்பாடுகளை அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது நகராட்சி பகுதிகளில் உள்ள நேரக்கட்டுப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற விதிமுறைகள் தொடரும் பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டீ கடைகள், பேக்கரிகள், நகைக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டிவி விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள் சாலை யோரங்களில் உணவு பொருட்கள் கடைகள் பேன்சி ஸ்டோர் செல்போன் விற்கும் மற்றும் பழுது நிற்கும் கடைகள் செயல்படாது.
ஆனால் காய்கறி கடைகள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், வங்கிகள், ஆகியவை முன்பு இருந்தது போலவே மதியம் 02.00 மணி வரை இயங்கும்.
ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம். பொது விநியோகக் கடைகள் இயங்கலாம். உணவகங்கள் காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், மதியம் 12.00 மணி முதல் 02.00 மணி வரையிலும், இரவு 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் பார்சல் பார்சல் மற்றும் டோர் டெலிவரி மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்கள் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமுதாய சமையல் கூடங்கள், அச்சகங்கள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இ- பாஸ் பெறும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.