உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் அவர் பேசியதாவது, “உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்போது உலகில் வாழும் அனைத்திற்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவுக்கு உயர்ந்தாலும் மாறினாலும் மாறுதல் அடைந்தாலும் தண்ணீரின் பெயர் என்பது மாறாது. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர்.
தமிழினமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர். மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் கூடினாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவப் புலமையோடு, மிகினும் குறையினும் நோய் செய்யும் என்றார் வள்ளுவர். திருமந்திரம் தேவாரமும் திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது.
நீர்நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊரணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என்று பிரித்து பெயர் சூட்டினர் தமிழர். எல்லாமே நீருள்ள இடம் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையின் அளவை கொண்டது. கடல் நீரை முன்னீர் என்றும் ஆற்று நீரை நன்னீரென்றும் குடிநீரை இன்னீர் என்றும் குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும் நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழினம். உடம்பை குளிர்வித்தலே குளித்தல் ஆனது.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது தமிழ் பழமொழி. நமது உடலின் அனைத்து செயல்பாடுகளும் முறையாகச் செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். உணவின்றி கூட மனிதனால் பல நாட்கள் இருக்க முடியும், நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக்கூடாது பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்று, ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பது நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தண்ணீரைக் காப்போம்! தாய் நிலத்தைக் காப்போம்!” எனக் கூறியுள்ளார்.
உலக தண்ணீர் நாள்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/42Jh1ZpH9A
— TN DIPR (@TNDIPRNEWS) March 22, 2023