திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று இனி வரும் காலங்களில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளன்றும் (ஜூன் 3 ஆம் தேதி) குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்திருந்தது.
அந்தவகையில் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை வெளியிட்டப்பட்டு இருந்த நிலையில் அப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க முடியாமல் போனது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ மானவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.