Skip to main content

"கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்; தேவையில்லாமல் வெளியே வராதீங்க!" - மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை!!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

coronavirus prevention meeting salem district collector speech


கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.15) நடந்தது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுத்திட பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும்.

 

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கும் வகையில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்றுக்கு உள்ளான நபர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க, கண்காணிப்பு மையங்களும் தொடங்கப்பட்டு வருகின்றன.

 

தற்போது மணியனூர் சட்டக்கல்லூரியில் 100 படுக்கையும், கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள சாரோன் மருத்துவமனை வளாகத்தில் 180 படுக்கையும், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி விடுதியில் 120 படுக்கையும் கொண்ட கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பரவாமல் இருக்க, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தற்போது வரை மாவட்டம் முழுவதும் 1.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

 

அடுத்த 2 வாரங்களில் கரோனா தொற்று மிகத் தீவிரமாகப் பரவும் சூழல் உள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொது இடங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும்.

 

பொதுமக்கள் தங்களுக்கோ அல்லது அருகில் உள்ளவர்களுக்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

 

தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலை, உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கடைப்பிடித்திட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

 

சேலம் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும். 

 

அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

 

இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 1,93,185 பேருக்கும், இரண்டாம் தவணையாக 32,935 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

 

அதேபோல் கோவாக்சின் தடுப்பூசி 28,166 பேருக்கு முதல் தவணையாகவும், 871 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் போடப்பட்டுள்ளது. போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 

 

சேலம் மாவட்டத்தில் ஏப். 13- ஆம் தேதி நடத்தப்பட்ட சளி தடவல் பரிசோதனையில் 138 பேருக்கும், ஏப். 14- ஆம் தேதி நடந்த பரிசோதனையில் 175 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

 

இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்திட வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார்.

 

ஆய்வுக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர்கள் சுப்ரமணி, செல்வக்குமார், சேலம் மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்