
100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ. 4,034 கோடியை வழங்காமல் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஊரகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி (மார்ச்.29) கடலூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 78 இடங்களில் திமுகவினர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விபீஷண புரத்தில் குமராட்சி ஒன்றிய கிழக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி. கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி மாவட்ட ஆதிராவிட நலக் குழு அமைப்பாளர் பரந்தாமன், ஒன்றிய துணை செயலாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.