
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “தமிழ்நாடு இருக்கிற சூழ்நிலையில் நாம் வரலாறு படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லோரும் புரிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் என்றால் என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? நீங்கள் சொல்லுங்கள் எது அரசியல்? எல்லாருக்கும் நல்லது நடப்பது தானே அரசியல். அது தான் நம்ம அரசியல்.
காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி, மக்கள் விரோத மன்னர் ஆட்சியை நடத்துகின்ற இவர்கள் நமக்கு எதிராக செய்கின்ற செயல் ஒண்ணா? ரெண்டா? மாநாட்டில் ஆரம்பித்தது அதன் பிறகு நான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா; பரந்தூர் சென்றது; இரண்டாம் ஆண்டு துவக்க விழா; இன்றைய பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள். ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், தோழர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இனி நடந்து கொண்டுதான் இருக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே. பாத்துக்கிட்டே இருங்க அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான ஒரு தேர்தலை சந்திக்கும். இதில் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்னு டிவிகே இன்னொன்னு டிஎம்கே”என்றார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. பெண்கள் தான் 2026-ஆம் ஆண்டு இந்த ஆட்சியைத் தூக்கிப் பிடிப்பார்கள். முதலமைச்சரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வென்றவர்கள்” என்று விஜய்யை விமர்சித்துள்ளார்.