Skip to main content

மீண்டும் களைகட்டிய ஈரோடு மாட்டுச்சந்தை...!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

தேர்தல் விதிமுறைகள் என்ற பெயரில் அதிகம் அல்லல் பட்டது சாதாரண தொழிலாளியும், விவசாயியும், வியாபாரிகளும் தான். ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை நடக்கும் மாட்டுச் சந்தை பிரபலமானது. ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும் வெளி மாநில வியாபாரிகள் வரை இங்கு நேரில் வந்து வியாபாரம் செய்வார்கள் அந்த ஒரு நாள் மட்டும் சுமார் ஐந்து கோடி பணப்புழக்கம் இங்கு இருக்கும். 

 

cow market


ஆனால் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் தரப்படுகிறதா என்பதை கண்காணிக்க இறங்கிய பறக்கும் அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணித்ததோ இல்லையோ வியாபாரிகளை வலைத்து வலைத்து பிடித்தது.  இதையடுத்து உரிய ஆவணமின்றி ரூ .50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தனர. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ 9. கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டிய பிறகு பணம் உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள் அதிகாரிகள்.

 


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்ததால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில்கள் மாட்டுச் சந்தைகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல வியாபாரிகள் அச்சப்பட்டனர்.

 

 

குறிப்பாக ஈரோடு  மாட்டு சந்தைக்காக வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா,  தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.  மேலும் தேனி கரூர் சேலம் திண்டுக்கல் திருநெல்வேலி திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கூடுதலாக வருவார்கள்.  ஆனால் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி முதல் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவில் மட்டுமே வந்திருந்தனர்.  ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியவில்லை..  ஒரு வாரம் ரூ.5 கோடி வரை வியாபாரம் இந்த சந்தை நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கடந்த ஒரு மாதமாக லட்சக்கணக்கில் கூட வியாபாரம் நடக்கவில்லை.

 

இந்நிலையில் சென்ற  18ஆம் தேதியோடு தேர்தல் முடிவடைந்ததால்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டது. 

 


இதையடுத்து இன்று கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.  மாடுகள் வரத்தும் அதிகமாக இருந்தது. இன்று நடந்த  சந்தையில்  பசுமாடுகள் 800,  எருமை மாடுகள் 600,  வளர்ப்பு கன்றுகளை 200  விற்பனையாயின.  இதனால் இன்று மீண்டும் சந்தை  களை கட்டியது. அப்படா, மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட முடிந்ததே... என்று மாடுகளின் உரிமையாளர்களும் வியாபாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்