Skip to main content

பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்!

Published on 29/03/2025 | Edited on 30/03/2025

 

Premalatha Vijayakanth letter to PM Modi

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று (28.03.2025) வெளியிட்டிருந்த அறிக்கையில், “ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பாலம். எனவே இந்த பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரைச் சூட்ட வேண்டும்.

இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க  பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேமலதா விஜயகாந்த் இன்று (29.03.2025) கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் கடிதம் மூலம் இதே   கோரிக்கையை விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்