
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தில் கடந்த நான்கரை மாதங்களாக பணி செய்த 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.34 கோடியை வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியங்களிலும், பயனாளிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையேற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மைக்கேல் பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று 100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்காத மோடி அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழ்நாட்டின் குரலுக்கு செவிசாய்க்காமல் ஒன்றிய அரசு சவம் போல் கிடப்பதாக கூறி பாடை கட்டி எடுத்து வந்த திமுகவினர் மற்றும் பெண்கள் நடுரோட்டில் வைத்து, “ரூபாய் 4,000 கோடி என்னாச்சு? எங்க 100 நாள் சம்பளத்தை கொடுக்க மாட்டீங்களா..” என ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் ராமராஜபுரத்திலும், வத்தலகுண்டு தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமையில் விருவீடு பகுதியிலும், வத்தலகுண்டு வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் விராலி பட்டி கிராமத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.