![corona virus impact in Pudukkottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/hUx8PBhNC73W1bKFnP41Ayeh5ciL2y23tm_id7y-XO0/1590156137/sites/default/files/inline-images/111111_411.jpg)
புதுக்கோட்டையில் தொடக்கத்தில் இல்லாத கரோனா ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது, அவர்களும் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். கடைசி நபர் வீட்டிற்கு செல்லும் நாளில் மும்பையில் இருந்து கறம்பக்குடி பகுதிக்கு வந்தவர்களை கறம்பக்குடி, காட்டாத்தி அரசு பள்ளிகளில் தங்க வைத்து சோதனை செய்தபோது, அதில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவரை தஞ்சை மருத்துவமனைக்கும், மற்ற 8 பேரை புதுக்கோட்டை கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனைக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டல் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மும்பை தொடர்பால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல அண்டக்குளத்திற்கு மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நகை மதிப்பீட்டாளர் வேலை செய்த வங்கி இன்று காலை முதல் திறக்கவில்லை. தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் ஆய்வு செய்து நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தொடக்கத்தில் டெல்லி தொடர்பால் ஒருவருக்கு தொடங்கிய கரோனா தொற்று அடுத்து சென்னை தொடர்பால் ஏற்பட்டது. தற்போது மும்பை தொடர்பால் ஏற்பட்டு வருகிறது.