கரோனா வைரஸ் தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையில் விவசாயிகளோ இன்னும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி கரூர் பகுதியில் திடீரென வீசிய சூறைக் காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் முறிந்து பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி அயிலை சிவசூரியன் "திருச்சி, கரூா் மாவட்டங்களில் நேந்திரம், ஏலக்கி, பூவன், ரஸ்தாளி, பச்சை லாடன் என ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி பாசன கால்வாய்களில் ஏற்பட்டு வரும் தண்ணீா் தட்டுப்பாடு, நில குத்தகை, உரம் பூச்சி மருந்து விலை, முட்டு வழி செலவு, கூலி தொழிலாளா் ஊதியம் உயா்வு, கூலி தொழிலாளா் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வாழை சாகுபடி சரிபாதியாக குறைந்து போனது.
கடந்த ஆண்டு சாகுபடி செய்யபட்ட வாழைகள் தற்போது விளைந்து அறுவடை செய்யபோகும் தருவாயில் கரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட 144 தடை காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டது. அதுமட்டும் இல்லாமல் விவசாய கூலி தொழிலாளா்கள் பிரச்சனைகள் காரணமாகவும் உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் போனது. இதனால் வாழையிலேயே பழங்கள் பழுத்து வீணாகி கொண்டு இருந்ததை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதில் வாகன போக்குவரத்து ஓரளவு சீரடைந்தாலும், கடந்த ஆண்டுகளை போல் கொள்முதலுக்கான வியாபாரிகள் அதிகம் போ் வராத காரணங்களால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனா்.
இந்நிலையில் 8/4/2020 இரவு 7 மணி அளவில் திருச்சியில் இடியுடன் துவங்கிய லேசான மழையுடன் வீசிய சூறை காற்றால் அந்தநல்லூா் ஒன்றிய பகுதிகளான கடியாகுறிச்சி, ஜீயபும், திருச்செந்துறை, கொடியாலம், புலிவலம், அணலை, திருப்பராய்துறை, சிறுகமனி, பெருகமனி, பேட்டவாய்தலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளிலும், கரூா் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூா், நச்சலூா், மருதூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்யபட்டு அறுவடைக்கு தாயாரக இருந்த பழங்கள் மற்றும் பூவும், பிஞ்சுமாக இருந்த இளம் வாழைகள் ஒடிந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
2013-14 சூறைகாற்றாலும், 2015 -16 வரலாறு காணாத வறட்சியாலும், 2017-18 களில் வீசிய வா்தா புயல், கஜா புயல்களிலும், 2019 கடும் விலை வீழ்சியாலும் இந்தாண்டு கரோனா மற்றும் சூறை காற்று பாதிப்பாலும் வாழை சாகுபடி விவசாயிகள் தொடா்ந்து இழப்புகளுக்குள்ளாகி வருகின்றனா்.
ஏக்கா் 1க்கு குத்தகை ,சாகுபடிக்கென ரூ 2,50,000 செலவு செய்துள்ள நிலையில், வாழை விவசாயிகள் இழப்பை ஈடு செய்யும் வகையில், இழப்பீடாக ஏக்கா் 1க்கு அரசு ரூ 2-லட்சம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.