தமிழகம் முழுவதும் கரோனா நிவாரண நிதியாக அரசியல் கட்சிகள் முதல் முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் முதல்வர் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம், தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில்தான் திண்டுக்கல் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகரில் வசித்து வரும் கீர்த்தனா தனது ஒரு வயதான மகன் ராய்தாமஸ்க்கு இந்த ஆண்டு பிறந்த நாள் (27.5.2020ம் தேதி) கொண்டாடுவதை தவிர்த்து விட்டு கரோனா வைரஸ் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை கண்டு, பிறந்தநாள் கொண்டாடக்கூடிய பணம் பத்தாயிரத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து, தனது மகன் ராய்தாமஸ் பிறந்தநாளை கொண்டாடவில்லை, அந்த செலவு தொகை பத்தாயிரத்தை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதியில் சேர்த்து கொள்ளுமாறு கொடுத்தார். அதைகண்டு கலெக்டர் கீர்த்தனாவையும், அவருடைய மகனான ஒரு வயது குழந்தை ராய்தாமஸ்சையும் பாராட்டினார்.