கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆத்தூர் கிச்சிலி சம்பா, சிங்க்கார், இலுப்பை பூ சம்பா, சீரக வாசனை சம்பா உள்ளிட்ட பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை, நடவு செய்யும் நெல் நடவுத் திருவிழா நடைபெற்றது. விழாவில் பாரம்பரிய நெல் விவசாயி செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் முதல்வர் மணிவண்ணன் வருகைதந்து பாரம்பரிய நெல்ரகம், அதன் பயன், அது எவ்வாறு மனிதர்களுக்கு நன்மை செய்கிறது என சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய பாரம்பரிய நெல்விவசாயிகள், 'மண்வளத்தைப் பாதுகாக்கவும் மனிதர்களின் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கியக் காரணியாக இருப்பது பாரம்பரிய நெல்லும், அதன்மூலம் கிடைக்கும் அரிசியும்தான். நாம் சிறிய அளவிலாவது முயற்சி செய்து பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவேண்டும். பாரம்பரிய நெல்லின் மூலம் கிடைக்கும் நஞ்சில்லா உணவினால்தான், இந்த உலகம் நோயற்ற உலகமாக மாறமுடியும்" என்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர். விழாவில் ஏராளமான பாரம்பரிய விவசாயிகள் பங்கேற்றனர்.