சென்னையில் ஐ.ஐ.டியில் ஒரே நாளில், 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை ஐ.ஐ.டி கரோனா 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிவிட்டதாக மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் 9 மாணவர்கள் விடுதிகள், ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது. விடுதிகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். சென்றவாரம் வரை ஐ.ஐ.டியில் மட்டும் 66 மாணவர்கள் உட்பட, 71 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில், 33 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கு மொத்தமாகக் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் 104 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதனால், ஐ.ஐ.டி வளாகம் கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிவருகிறதோ என்ற அச்சம் அங்கு நிலவி வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக அடுத்த அறிவிப்பு வரும்வரை அனைத்துத்துறை மையங்கள், விடுதிகள் மூடப்படுவதாக ஐ.ஐ.டி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் முடிந்த அளவு வீட்டில் இருந்தே ஆன்லைனில் பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பின் ஆரம்பத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் கரோனா ஹாட் ஸ்பாட்டாகக் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கையாகப் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.