!["Corona has begun to rise" - Chief Minister MK Stalin's speech!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AJfCymWbJSdNOKPhF36qWe8IGjHObyBVcVAf3qJdMQg/1640845448/sites/default/files/inline-images/MKSA4343434.jpg)
இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (30/12/2021) காலை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர்ப்பங்கீட்டை இடைக்காலத் தீர்ப்பு மூலம் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பெற்று தந்தார். தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே கரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்கலாமா என கருத்து கேட்டேன். கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பயனாளிகளில் 5,000 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாளில் வீடு தேடி நலத்திட்ட உதவிகள் வரும்.
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில் இந்த ஆறு மாத காலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கான கூலி ரூபாய் 3.25- லிருந்து ரூபாய் 10 ஆக உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் ரூபாய் 83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல் கொண்டு வரும் விவசாயிகள் எந்த புகாரும் கூறாத வகையில், கொள்முதல் நிலைய ஊழியர்களின் பணி தேவை" எனத் தெரிவித்துள்ளார்.