கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) மாலை 5 மணி அளவில் சேலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம் போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.