Skip to main content

தொடர் நீர்வரத்து; கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

continuous flow; Bhavanisagar dam looks like the sea

 

ஈரோடு மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் உள்ளது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 23ந் தேதி 104.95 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது.

 

இன்று 24ந் தேதி காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1079 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கனஅடி, பவானி ஆற்றுக்கு 250 கனஅடி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி என மொத்தம் 1250 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை அடுத்து பொதுப்பணித்துறையினர் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அணை முழுமையாக நிரம்பிய பிறகு அணைக்கு வரும் நீர் அப்படியே பாசத்திற்காகவும், காவிரி ஆற்றிலும் வெளியேற்றப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்