![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/2DCqR8DCZOvsBHSUU2ESCEwphdmrvOb4SeaKWw5AHYw/1667391203/sites/default/files/inline-images/n21813.jpg)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமல்லாது சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் மழை பொழிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 22 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் 14 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 3,300 கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியிலிருந்து தற்பொழுது உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்பொழுது 18.42 அடியாக உள்ளது. தொடர்ந்து கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும் இதனால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும் முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.