தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னை மட்டுமல்லாது சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நேற்று இரவு முதல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 14 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூரில் குறிப்பாக பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளை தவிர்த்து மற்ற ஏரிகளும் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 22 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் 14 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து என்பது அதிகரித்து வருகிறது.