![To continue the AIADMK rule! -The administrator of ‘Pasarai’ conducted the homage at Andal temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/2AXDkjHGg_6sYka2sVaxNA7IQxBVRotVHeQvonN_JEI/1600865546/sites/default/files/inline-images/admk-tem.jpg)
‘யாகம்கிறாங்க.. பூஜைங்கிறாங்க.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிப்பாடுங்கிறாங்க..’ ‘எங்கே? எதற்காக?’ என்று கேட்டால், “அதுவந்து.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல.. அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி ஹெலிகாப்டர்ல.. எல்லாம் ஒரு வேண்டுதலுக்காகத்தான்..” என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளும் கட்சியினர்.
சில நாட்களுக்கு முன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., அதன்பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என, தொடர்ந்து ஆண்டாள் கோவிலில், சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டதும், தற்போது விஷ்ணுபிரபுவும், குடும்பத்தோடு தனி ஹெலிகாப்டரில் வந்து, வழிபாடு நடத்திவிட்டுச் சென்றதும், பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபுவை தொடர்பு கொண்டோம். “2011-இல் இருந்து தமிழகத்தில் அம்மா ஆட்சிதான் நடக்குது. 2021-லும் அம்மா ஆட்சியே தொடரணும்னு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுதர்ஸன ஹோமம் நடத்தினோம். அன்னதானத்துக்கும் ஏற்பாடு பண்ணுனோம். அவ்வளவுதான். அடுத்த முதல்வர் வேட்பாளர் யாருங்கிறது, கட்சி முடிவு பண்ணுற விஷயம். அதுக்குள்ள நான் போக விரும்பல.” என்று முடித்துக்கொண்டார்.
நான்கைந்து பேர் மட்டுமே பயணம் செய்ய முடியுமென்பதால், விஷ்ணுபிரபுவுடன் அவரது குடும்பத்தினர் மட்டும் ஹெலிகாப்டரில் வந்திருக்கின்றனர். கோயம்புத்தூரிலிருந்து கட்சியினர், முன்கூட்டியே காரில் வந்துவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்க.. அமரராகிவிட்ட ஜெயலலிதா படத்தைக் கோவிலில் வைத்து ஹோமம் நடத்தியது, அப்பட்டமான ஆகம விதிமீறல் என்கிறார்கள், ஆண்டாள் பக்தர்கள்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
சிறிய ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில், தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கி, வழிபாடு செய்தால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும் என்பதை, விஷ்ணுபிரபு நன்றாகவே அறிந்து வைத்திருப்பார் போலும்!