
1.5 கோடி மதிப்புள்ள 10 சொகுசு கார்களுடன் சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
பூனே நாக்பூரிலிருந்து சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரியத் துவங்கியது.
இதனைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் உள்ளே இருந்த கார்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வாலாஜாபேட்டை பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.