தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகள், வேலை செய்யும் நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் தூய்மைப்படுத்தி அதனை மலரால் அலங்கரித்து இறைவழிபாடு செய்கின்றனர். அதேபோல் விஜயதசமி(12.10.2024) அன்று முதன்முதலாகப் பள்ளிச் செல்லும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள். இதன்மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜசதசமிக்கு தலைவர்கள் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்து வாகனங்களையும், அரிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிப்படும் ஆயுதபூஜௌ சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற இனிய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வருகைக்குப் பிறகு த.வெ.க. தலைவர் விஜய் பண்டிகை காலங்களில் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததால், இந்து முன்னணி அமைப்பினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.