Skip to main content

வேங்கைவயல்: “பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது அரசு?” - ராமதாஸ் 

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
"How the government going to provide justice to the vengaivayal victims?” - Ramadoss

“வேங்கைவயல்  குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வி. குற்றவாளிகளைத் தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது?” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பான வழக்கில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வியடைந்திருக்கிறது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன், 31 பேரின் டி.என்.ஏ.க்களும் ஒத்துப்போகவில்லை என்பதை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.  இதன் மூலம் ஓராண்டுக்கு முன் விசாரணை எந்த இடத்தில் தொடங்கியதோ, அதே இடத்திற்கே  மீண்டும்  திரும்பிச் சென்றுள்ளது. வேங்கைவயல் குற்றத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை தவறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டது. சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரோ பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே பலரை டி.என்.ஏ சோதனைக்கு உள்ளாக்கினார்கள். குற்றமிழைத்தவர்களை விடுத்து பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதால் தான் அது தோல்வியடைந்துள்ளது.

வேங்கைவயல்  வழக்கில்  தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை தப்பவிட்டுவிட்டது என்பதுதான் தெளிவாகத் தெரியவரும் உண்மை ஆகும். இந்த வழக்கில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள காவல்துறை, அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருக்கிறது. அனுமதி கிடைக்காவிட்டால் அடுத்து என்னவாகும்? என்பது தெரியவில்லை.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வை தனித்துப் பார்க்க முடியாது. அந்த வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதேபோன்ற நிகழ்வுகள் நடந்து அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வேங்கைவயல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அது அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர என்ன செய்யப் போகிறது? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்