வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு மர்ம காய்ச்சல் எனச்சொல்லி டெங்கு என்பதை வெளியே தகவல் சொல்ல மறுக்கிறது வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை.
இது பொதுமக்களை பெரிதும் வேதனைப்படவைத்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட தங்களது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது என்பதை கணக்கு காட்டி அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுக்க பொய்யான தகவலை வெளியே கூறுகின்றனர் என்கின்றனர் பலரும்.
இந்நிலையில் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்டத்தில் 16 பேர் மட்டும்மே இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனக்கூறினார்.
இதுவே பொய்யான தகவல். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என காய்ச்சலால் நோயாளிகள் குவிகிறார்கள். பலருக்கும் டெங்கு காய்ச்சல் என உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தான் தகவல்கள் வருகின்றன. அப்படியிருக்க வெறும் 16 பேருக்கு மட்டும் தான் எனச்சொல்வது வேதனையாக இருக்கிறது. உண்மையான தகவலை கூட வெளியே சொல்ல வேண்டாம், தயவு செய்து தரமான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வேண்டுக்கோள் மட்டும் பொதுமக்கள் சார்பில் வைக்கிறார்கள்.