நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டுக்கான வாக்குப்பதிவு, ஆண்டிகுப்பம் என்ற பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வாக்குச் சாவடி முன்பு பாதுகாப்புக்காக கிருஷ்ணராஜ் என்ற காவலர் நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் நின்றபடியே வாலிபர் ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவலர் கிருஷ்ணராஜ், அந்த வாலிபரிடம் சென்று “வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குத் தாண்டி தான் செல்போன் பேச வேண்டும். வாக்குச்சாவடி அருகே செல்போன் பேசுவது தவறு” என்று அவரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.
காவலர் கண்டித்ததைக் கண்டு கோபமடைந்த அந்த வாலிபர், காவலரைத் திட்டிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் அதே வாலிபர், வாக்குச் சாவடி மையத்தின் அருகில் உள்ள கழிவறை பகுதியில் இருந்தபடி ஒரு பட்டாசை கொளுத்தி வாக்குச் சாவடிக்குள் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதைப் பார்த்து பதறிய வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நல்வாய்ப்பாக பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போன் பேசிய இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பதும், அவரை காவலர் கிருஷ்ணராஜ் கண்டித்த ஆத்திரத்தின் காரணமாக பட்டாசை கொளுத்தி வாக்குச் சாவடிக்குள் வீசிவிட்டு ஓடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆனந்தராஜை கைது செய்தனர்.