Published on 30/04/2020 | Edited on 30/04/2020
கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பேரூராட்சி கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் 18 வார்டுகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கரோனா நோய் பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பேரூராட்சி செயல் அலுவலர் சுமா தலைமையில் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாக, குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த ரூபிதா என்கிற மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பேரூராட்சி செயல் அலுவலர் சுமாவுக்கு பாராட்டு கடிதம் எழுதி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுமி ரூபிதா எழுதியுள்ள அந்த கடிதத்தில், “செயல் அலுவலர், துப்புரவு அதிகாரி, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வணக்கம்”, என குறிப்பிட்டு, “அயராது உழைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் வெளியில் இருந்து எங்களை காப்பதால், நான் வீட்டிலிருந்து, உங்கள் அனைவரின் நலன் காக்க இறைவனிடம் வேண்டுகிறேன்” என எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தை படித்து பார்த்த குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும், அனைவரிடமும் படித்து காட்டினார். அந்த சிறுமியின் கடிதம் பேரூராட்சி பணியாளர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.