![College student passed away in Erode government collision](http://image.nakkheeran.in/cdn/farfuture/TGgJZwGoPLYY8aWz7ddWqqFLFQQU5lkZ39cfjXefDcc/1688129622/sites/default/files/inline-images/998_115.jpg)
ஈரோடு, சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் கவின் ராஜ் (18). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் நசியனூர் சி.எஸ்.ஐ. நகரைச் சேர்ந்த வினோத் குமார் (17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர உள்ளார்.
இந்நிலையில் நேற்று இவர்கள் 2 பேரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்று கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சி முடிந்த பின்னர் நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். வேப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் இருந்து ஈரோடு - பெருந்துறை ரோட்டுக்கு வந்த போது, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவர்களிருவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கவின்ராஜ், வினோத்குமார் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் சேர்ந்த சிறிது நேரத்தில் கவின்ராஜ் பரிதாபமாக இறந்தார். வினோத்குமார் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வினோத்குமார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் கவின்ராஜ், வினோத்குமார் மீது மோதிய அரசு பஸ்சின் கண்ணாடியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விபத்தை ஏற்படுத்திய அந்தியூரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஸ்சின் கண்ணாடியை உடைத்தவர்கள் குறித்தும் விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.