சிதம்பரத்தில் கடத்தப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து சிதம்பரத்தில் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. கல்லூரி பேருந்தை சிதம்பரத்தை சேர்ந்த டிரைவர் பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்று வருவார். டிரைவர் பாஸ்கர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பேருந்தை சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் ஆர்ச் அருகே நிறுத்தி இருந்தார். நேற்று காலை வழக்கம்போல் பேருந்தை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றுள்ளார். அப்போது அவர் நிறுத்தியிருந்த இடத்தில் பேருந்து இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அவர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பேருந்து காணாமல் போனது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீஸாரும், கல்லூரி ஊழியர்களும் பேருந்தை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கடலூர் அருகே எஸ்.என்.சாவடி பகுதியில் கல்லூரி பேருந்து நிற்பதாக கல்லூரி ஊழியர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேருந்தை மீட்டு சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பேருந்தை கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பெரியசாமி (51), நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராம திலகன் மகன் அஜித்குமார் (24) ஆகியோர் இந்த பேருந்தை கடத்தி வந்தது தெரியவந்தது. சிதம்பரம் நகர போலீசார் அவர்களைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.