கோவையில் இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
2010- ஆம் ஆண்டு, கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் கடத்திக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்ட நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது காவல்துறைக்கு தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் மனோகரன் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது தப்பியோடிய குற்றவாளி மோகன்ராஜை என்கவுண்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றது. அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கை உறுதி செய்தது. இதை எதிர்த்து, மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிபதிகள் பாலினாரிமன் உள்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.