அரசுப் பணியில் இருந்தபோது இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி தனக்கு ஒரு வீடு வழங்கக் கோரி திருவாரூர் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அவர் மனு கொடுத்த விதம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வழக்கம்போல் மாவட்டம் முழுவதிலிருந்தும் மனுவோடு வந்திருந்த பொதுமக்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் காயத்திரியும் அந்தந்த துறை அதிகாரிகளிடம் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது யாரும் எதிர்பார்த்திடாத முறையில் மின்வாரியத்தில் பணிபுரிந்து இரு கைகளையும் இழந்த புதுக்குடியைச் சேர்ந்த சண்முகவேலு என்கிற மாற்றுத்திறனாளி, தனக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என தனது வாயால் மனுவைக் கொண்டுவந்து ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.
அவரின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் காயத்திரியோ உடனே துறை அதிகாரிகளை அழைத்து, அவருக்கு வீடு வழங்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்ய உத்தரவிட்டதோடு, தேவையான தகுதிகள் இருந்தால் அவருக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.