விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர், தனது குடும்பத்தினரோடு நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரகாஷ், “மரக்காணம் பகுதியில் நான்கு பேர் இணைந்து ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. நான், 25 பேரிடம் பணம் வசூல் செய்து மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை அந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளேன். உரிய காலத்தில் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் நிதி நிறுவனம் நடத்தியவர்கள் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு புகார் அளித்தும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர்.
நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்தும் அந்த நிதி நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதாரண ஏழை எளிய மக்களிடம் வசூல் செய்த பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், இது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் முறைப்படி புகார் எழுதி வாங்கிய போலீசார், மாவட்ட கண்காணிப்பாளரிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தீக்குளிக்க முயன்ற பிரகாஷ் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.