Skip to main content

“எம்.ஜி.ஆரால் முதலாளி என அழைக்கப்பட்ட கோவை செழியனுக்கு எடப்பாடியின் அ.தி.மு.க. அவமரியாதை செய்துள்ளது..”- ஈஸ்வரன் கண்டனம் 

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

Coimbatore Chezhiyan poster mater er eswaran

 

"கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி தலைவர் கோவை செழியன் பிறந்தநாளில் அவர் படங்களை அகற்றிய அ.தி.மு.க.வினரை வன்மையாக கண்டிக்கின்றோம்" என கூறியுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 


மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, தலைவர் கோவை செழியனின் 90-வது பிறந்தநாளை கொண்டாட கொங்கு மண்டலம் முழுவதும் ஆங்காங்கே அவருடைய உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கொ.ம.தே.க. சார்பில் செய்யப்பட்டது. கொங்கு மண்டலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று இராசிபுரம், கோவை உள்ளிட்ட இடங்களில் கோவை செழியனுக்கு மரியாதை செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் அராஜக போக்கில் தடுத்து அகற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம். 

 


எம்.ஜி.ஆரால் முதலாளி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் கோவை செழியன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் உள்ளிட்டவர்களை வைத்து படம் தயாரித்து திரைத்துறையில் அன்றைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவருடைய பல படங்களுக்கு கலைஞர் கதை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரால் போற்றப்பட்ட நபர்களில் ஒருவரான அவரின் பிறந்தநாள் விழா அனுசரிப்பதை அவமதிக்கும் நோக்கில், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் வழிவந்தவர்கள் நடந்து கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

 


கோவை செழியன் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் கொங்கு வேளாள சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர். அப்படிப்பட்ட மனிதரை கொங்கு மண்டல மக்கள் போற்றி உணர்வோடு அவருக்கு மரியாதை செய்வதை அ.தி.மு.க.வினர் அவமதித்திருப்பது அனைவருடைய மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற அ.தி.மு.க.வின் அராஜக போக்கை கொங்கு மண்டல மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். கோவை செழியனை அவமதித்தது முதலமைச்சரின் உத்தரவா, மாவட்ட அமைச்சரின் உத்தரவா அல்லது சட்டமன்ற உறுப்பினரின் உத்தரவா. இந்த செயலுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கிடைக்கும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்