திமுக தலைமையிலான அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. முன்னதாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், 131 நாட்களுக்குப் பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. மறுபுறம் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மேலும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்ற முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது கவர்னர் இன்னும் பல மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலே இருக்கிறார். இது சம்பந்தமாக தெலுங்கானா அரசு கூட கவர்னரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார்கள். அது போன்று ஏதாவது.. என்று கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்று சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார். மேலும், கவர்னரை மாற்றுவதற்கு ஏதாவது கோரிக்கை வைப்பீர்களா... என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “நாங்கள் நினைப்பது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சனையே இல்லை” என்றார்.