![CM Stalin had a telephonic conversation with a woman belonging to his party regarding the constituency situation](http://image.nakkheeran.in/cdn/farfuture/J0DpiOqYe8HWhI-sRskErDQNmalUVqsw1eNjmeILMBo/1676627976/sites/default/files/inline-images/984_2.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக எம்.பி. கனிமொழி நேற்று பிரச்சாரம் செய்தார். முதல்வரும் தேதி ஒதுக்கி பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சார வேலைகள் குறித்தும் களநிலவரம் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
அதில் ஒரு உரையாடல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “வணக்கம்மா, நான் ஸ்டாலின் பேசுறேன்.” என முதல்வர் பேச, “அண்ணா, சொல்லுங்கண்ணா.” என அந்தப் பெண் பதிலளிக்கிறார். “தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?” என்ற முதல்வரின் கேள்விக்குப் பதிலளித்த அந்தப் பெண், “இங்கே திமுக வாக்காளர்கள் தான் அதிகம்” எனச் சொல்கிறார். தொடர்ந்து பேசிய அந்த பெண், “நீங்க போன் பண்ணுவீங்கனு நினைச்சு கூட பாக்கல” எனக் கூறினார்.
“அங்கு பொறுப்பாளர் யார்?” என முதல்வர் கேட்க, “சென்னையில் இருந்து கருணாநிதி வந்துள்ளார்” எனக் கூறினார். “எல்லாரையும் நல்லா பாத்துக்கோங்க.. எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க” எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் தனது இணைப்பை துண்டித்ததும், அந்தப் பெண், “ஹய்யோ, ஸ்டாலின் பேசினார்!” என உற்சாகத்தில் கத்தியதும் முதல்வரின் உரையாடலும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.