முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை ’முதலமைச்சர் நேரு’ என அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் கூறியதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காவிரி ஆணையம் அமைக்க வெற்றி விழா என்று அதிமுக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
அதேநேரத்தில், இப்படி அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் பேசும் போது தங்களை அறியாமல் போகிற போக்கில் எதையே உளறி பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அண்மையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திருடி டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களும் கொடுத்து வருகிறார் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர் ’முதலமைச்சராக இருந்த இந்திராகாந்திக்கு’ அஞ்சி திமுக தலைவர் போய் வழக்கை வாபஸ் வாங்கி வந்துவிட்டார் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காவிரி ஆணையம் அமைக்க வெற்றி விழா கூட்டத்தில் கதர்கிராம அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய எம்.பி.வைத்தியலிங்கம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை ’முதலமைச்சர் நேரு’ என்று கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வைத்தியலிங்கத்தின் பேச்சை கேட்க விரும்பாத மக்கள், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒருவர் பின் ஒருவராக எழுந்து சென்றனர். இதனால் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே இருக்கைகள் காலியாக காணப்பட்டன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் உளறலாக பேசுவதும், பிறகு மறுப்பு தெரிவிப்பதும் வழக்கமாகிவிட்டது.