காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் - வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் 706.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று (17.08.2024) மாலை 05.45 மணியளவில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்குச் சாவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு வணக்கம் எனத் தமிழில் கூறி பேசுகையில், “ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனையாகவே மிகப்பெரிய இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் கழிவுகளை வெளியேற்றாத தொழில்நுட்பத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பின்பற்றுகிறது” எனத் தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த மெகா குடியிருப்பு வளாகம் இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கென பிரத்தியேக தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் ” எனத் தெரிவித்திருந்தார்.