Skip to main content

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 02/01/2025 | Edited on 02/01/2025
CM MK Stalin gave good news to the government employees

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2023-2024ஆம் ஆண்டிற்கான, சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், மற்றும் சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ. 163.81 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் ஆயிரம் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்