![Closure of two tunnels in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/tYc4g8e40QC5GJ1_TlkrHJNOmWpLCfjhpIAv0IngNT4/1667306221/sites/default/files/inline-images/n21784.jpg)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இந்தநிலையில் சென்னை பிராட்வேயில் இருந்து மணலி நோக்கிச் சென்று கொண்டிருந்த 64 சி என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென வெள்ள நீரில் சிக்கியது. சுமார் 20க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்தப் பேருந்து வெள்ள நீரில் சிக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போக்குவரத்துக் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மூலமாகப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பகுதியில் மீட்புப் பணிக் காரணமாக பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை என இரண்டு சுரங்கப்பாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.